கீழ்பென்னாத்தூர் அருகே நடத்தையில் சந்தேகம்: 2 மகள்களை கடப்பாரையால் அடித்துக்கொன்ற நெசவுத்தொழிலாளி மனைவி உயிர் ஊசல்
கீழ்பென்னாத்தூர் அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவி, 2 மகள்களை கடப்பாரையால் தாக்கியதில் 2 மகள்கள் இறந்தனர். தாக்கிய நெசவு தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கீழ் பென்னாத்தூர்,
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரை அடுத்த ராயம்பேட்டையை சேர்ந்தவர் முருகன் (வயது 38), நெசவுத்தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி தேவிகா (27). இவர்களுக்கு மீனா (10), ஷிவானி (8) என 2 மகள்கள். அங்குள்ள அரசு பள்ளியில் மீனா 5-ம் வகுப்பும், ஷிவானி 3-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
தேவிகா அங்குள்ள நடுநிலைப்பள்ளியில் 4 ஆண்டுகளாக துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார். அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு முருகன் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பள்ளியில் செய்து வந்த வேலையை விட்டு விட்டு கீழ்பென்னாத்தூரில் உள்ள ஓட்டலில் கடந்த 15 நாட்களாக தேவிகா வேலைக்கு சென்று வந்ததாகவும், அங்கும் வேலைக்கு செல்லக்கூடாது என்று முருகன் தேவிகாவிடம் தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் மீனாவும், ஷிவானியும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது முருகன், தேவிகாவிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தேவிகாவையும், தூங்கிக்கொண்டிருந்த மகள்களையும் கடப்பாரையால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் ஷிவானி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தாள். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தேவிகா, மீனா 2 பேரும் சிகிச்சைக்காக திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மீனா உயிரிழந்தாள். தேவிகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, கிராமிய துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, முருகனை கைது செய்தனர்.
இந்த சம்பவம் ராயம்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.