விழுப்புரம் வனத்துறை அலுவலகத்தில், கருவேல மரங்களுக்கான டெண்டரில் ஒப்பந்ததாரர்களுக்கிடையே தகராறு - போலீஸ் குவிப்பு

விழுப்புரம் வனத்துறை அலுவலகத்தில் கருவேல மரங்களுக்கான டெண்டரில் ஒப்பந்ததாரர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அங்கு போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

Update: 2020-11-12 05:45 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சமூக வனச்சரகத்திற்குட்பட்ட தேற்குணம், செவலபுரை, பெரியநொளம்பை, அவ்வையார்குப்பம் உள்ளிட்ட 25 ஊராட்சிகளில் உள்ள ரூ.75 லட்சம் மதிப்பிலான கருவேல மரங்களை வெட்டி எடுத்துச்செல்வதற்கான டெண்டருக்கு (ஒப்பந்தப்புள்ளி) வனத்துறை அலுவலகத்தில் இருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி நேற்று விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் கருவேல மரங்களுக்கான டெண்டர் நடந்தது. இதில் வனத்துறையில் பதிவு செய்த விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட வெளிமாவட்டங்களை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர்.

இதனிடையே விழுப்புரத்தை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள், வெளிமாவட்டத்தை சேர்ந்த ஒப்பந்ததாரர்களை பங்கேற்கக்கூடாது என்று அலுவலக கதவை இழுத்து மூடி தகராறு செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூரில் நடந்த டெண்டரில் அம்மாவட்டத்தை சேர்ந்தவர்கள், விழுப்புரத்தை சேர்ந்தவர்களை பங்கேற்க அனுமதிக்காததால், விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற டெண்டரில் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களை அனுமதிக்க மாட்டோம் என்று கோஷமிட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று இரு தரப்பினரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு டெண்டரில் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். நேற்று மதியம் வரை கருவேல மரங்களுக்கான டெண்டர் நடைபெற்றது. இதையொட்டி மேலும் பிரச்சினை ஏதும் ஏற்படாமல் இருக்க வனத்துறை அலுவலகம் முன்பு போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்