தேவகோட்டை அருகே, 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - போக்சோ சட்டத்தில் சமையல்காரர் கைது
தேவகோட்டை அருகே 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சமையல்காரரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தேவகோட்டை,
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியராஜ் (வயது 52). இவர் சமையல் வேலை செய்து வருகிறார். இவர் 7 வயது சிறுமியிடம் மிட்டாய் தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. தனக்கு நேர்ந்த துன்பத்தை அந்த சிறுமி அழுதுக்கொண்டே தனது பாட்டியிடம் தெரிவித்து உள்ளாள்.
தாய், தந்தை மனநலம் பாதிக்கப்பட்டு வெளியூரில் உள்ளதால் இந்த சிறுமி தனது பாட்டி வீட்டில் வசித்து வரும் சூழ்நிலையில் இச்சம்பவத்தால் பாட்டி அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சபாபதி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபிஉமா வழக்குப்பதிவு செய்து பாண்டியராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.