அவினாசி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை - கணக்கில் வராத ரூ.60 ஆயிரம் பறிமுதல்

அவினாசி தாலுகா அலுவலகத்தில் நேற்று மாலை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் கணக்கில் வராத ரூ.60 ஆயிரத்து 510 பறிமுதல் செய்யப்பட்டது. இது பற்றிய விவரம் வருமாறு:-

Update: 2020-11-11 22:30 GMT
அவினாசி,

திருப்பூர் மாவட்டம் அவினாசி சேவூர் ரோட்டில் தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நில அளவை பிரிவு, இசேவை மையம், தேர்தல் பிரிவு, சிவில் சப்ளை என்பன உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் உள்ளன. அவினாசி வட்டாரத்தில் உள்ள 31 ஊராட்சி பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்களது பல்வேறு தேவைகளுக்காக இங்கு வந்து செல்கின்றனர்.

அவினாசி தாலுகா அலுவலகத்தில் தாசில்தாராக சாந்தி என்பவர் இருந்து வருகிறார். இதுபோல் தலைமையிடத்து துணை தாசில்தாராக தமிழ் ஈஸ்வரன் உள்ளார். இது தவிர பல்வேறு பணிகளுக்காக அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். தாசில்தார் சாந்திக்கு நேற்று பணியிட மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு திருப்பூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுசல்யா தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவினாசி தாலுகா அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இதையொட்டி அலுவலக கதவு உள்புறமாக மூடப்பட்டது. உள்ளே இருந்து யாரும் வெளியே செல்லவும், வெளியாட்கள் யாரும் உள்ளே வரவும் அனுமதிக்கவில்லை.

தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்தனர். பின்னர் அங்கு சுமார் 3½ மணி நேரம் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.60 ஆயிரத்து 510-ஐ பறிமுதல் செய்தனர். இதையடுத்து இரவு 9.30 அணி அளவில் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

அவினாசி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்