தீபாவளி முன்பணம், நிலுவை சம்பளம் கேட்டு புதுக்கோட்டை நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் தர்ணா
தீபாவளி பண்டிகைக்கு முன்பணம், நிலுவை சம்பளம் கேட்டு புதுக்கோட்டை நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை நகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு மாத சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது தொடர்பாக கடந்த சில நாட்களாக அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், தீபாவளி பண்டிகைக்கு முன்பணம் மற்றும் சம்பளம் கேட்டு நடந்த போராட்டத்தின்போது அதிகாரிகள் உறுதி அளித்தபடி வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலை புதுக்கோட்டை நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தீபாவளி பண்டிகைக்கு முன்பணம் மற்றும் நிலுவையில் உள்ள சம்பள பணத்தை வழங்க கேட்டு போராட்டம் நடத்தினர். மேலும் நகராட்சி அலுவலக நுழைவுவாயில் கதவை மூடினர். மேலும், நகராட்சி அதிகாரியை கண்டித்து கோஷமிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், வருவாய் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி, தாசில்தார் முருகப்பன் ஆகியோர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர்பாட்ஷாவும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் தீபாவளி பண்டிகைக்கு முன்பணம் மற்றும் நிலுவை சம்பளத்தை வழங்க இன்று (வியாழக்கிழமை) நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தினால் நகராட்சி அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.