தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் தரிசனம்
தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் திருக்கல்யாண திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தென்காசி,
தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவில் வளாகத்திலேயே நடந்தது. தினமும் காலையில் சுவாமி-அம்பாளுக்கு அபிஷேகம், தீபாராதனை, மாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இந்த ஆண்டு தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக பஞ்சமூர்த்திகள் புறப்பாடு கோவில் வளாகத்திலேயே நடைபெற்றது.
நேற்று மாலையில் தபசு இருக்கும் உலகம்மனுக்கு காசி விசுவநாதர் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நடந்தது. பின்னர் இரவில் அம்மன் சன்னதி மண்டபத்தில் சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. சுவாமி, அம்பாளுக்கு திருமாங்கல்யநாண் பூட்டும் நிகழ்ச்சி நடைபெற்ற பின்னர் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் பரஞ்சோதி, தக்கார் சங்கர், கோவில் நிர்வாக அலுவலர் யக்ஞ நாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
பணகுடி
பணகுடி ராமலிங்க சுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி, ராமலிங்க சுவாமியும், சிவகாமி அம்பாளும் மாலை மாற்றி பக்தர்களுக்கு தபசு காட்சி கொடுத்தனர். பின்னர் கோவில் முன்மண்டபத்தில் எழுந்தருளினர்.
நம்பி சிங்க பெருமாள் கோவிலில் இருந்து பல்வேறு சீர்வரிசைகள் தாம்பூலத்தில் கொண்டு வரப்பட்டது. அதன்பிறகு மங்கள வாத்தியங்கள் முழங்க திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் பக்தர்கள் முககவசம் அணிந்து குறைந்த அளவில் பங்கேற்றனர்.