ஆதிதிராவிடர்கள் மீதான தாக்குதல் வழக்குகளில் தண்டனை விகிதத்தை அதிகரிக்க வேண்டும் எடியூரப்பா உத்தரவு
ஆதிதிராவிடர்கள் மீதான தாக்குதல் வழக்குகளில் தண்டனை விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக அரசின் சமூக நலத்துறை சார்பில் ஆதிதிராவிடர்கள் மீதான தாக்குதல்கள் குறித்த உயர்மட்ட கண்காணிப்பு குழுவின் ஆலோசனை கூட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் எடியூரப்பா கலந்து கொண்டு பேசியதாவது:-
கர்நாடகத்தில் ஆதிதிராவிட மக்கள் மீது நடைபெறும் தாக்குதல் குறித்து தகுந்த பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இத்தகைய வழக்குகளில் 60 நாட்களில் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையும் எந்த தவறும் நிகழாத வண்ணம் மிகுந்த எச்சரிக்கையுடன் நடைபெற வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் புகார் அளிக்கும்போது, அதை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்.
வாக்குமூலங்கள்
இதுபோன்ற வழக்குகளில் சம்பவம் நடந்த பகுதியை ஆய்வு செய்வது மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் ஆகியவை வீடியோவில் பதிவு செய்யப்படுகின்றன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் குறைந்தது 100 ரேஷன் அட்டைதாரர்கள் இருந்தால் அங்கு ஒரு ரேஷன் கடையை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தாக்குதலுக்கு உள்ளாகுபவர்களுக்கு விதிமுறைகளின்படி நிவாரண உதவி வழங்கப்படுகிறது.
இதற்காக நடப்பு ஆண்டில் ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதில் ரூ.15 கோடி கலெக்டர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறித்த காலத்திற்குள் நிவாரண உதவியை வழங்க கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மட்டுமின்றி மத்திய அரசு டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை மூலம் வழங்கும் உதவிகளும் அந்த மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தண்டனை விகிதம்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும்போது, சிறு காரணங்களுக்காக அந்த வாய்ப்பை நிராகரிப்பதை தவிர்க்க வேண்டும். மாவட்ட மற்றும் மண்டல அதிகாரிகள் 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆதிதிராவிடர்கள் மீதான தாக்குதலை கண்காணிக்கும் குழு கூட்டத்தை நடத்த வேண்டும். இதில் அந்த மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஆதிதிராவிடர்கள் மீதான தாக்குதல் வழக்குகளில் தண்டனை விகிதம் 6 சதவீதம் மட்டுமே உள்ளது. இதை அதிகரிக்க போலீஸ் துறை, அரசு வக்கீல்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் உரிய முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு எடியூரப்பா பேசினார்.