சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 40 சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டன - ரசிகர்கள் வராததால் வெறிச்சோடின

சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நேற்று 40 சினிமா தியேட்டர்கள் மட்டுமே திறக்கப்பட்டன. ரசிகர்கள் வராததால் பல தியேட்டர்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

Update: 2020-11-11 15:01 GMT
சேலம், 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. இந்தநிலையில் கொரோனா தாக்கம் குறைந்து வந்ததால் சமீபத்தில் தளர்வுகளை அறிவித்து அரசு உத்தரவிட்டது. இதனால் கடந்த 7 மாதங்களுக்கு பிறகு சினிமா தியேட்டர்களை திறக்க அரசு அனுமதித்தது.

அதன்படி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 150-க்கும் மேற்பட்ட சினிமா தியேட்டர்களை திறப்பதற்கான நடவடிக்கைகளில் அதன் உரிமையாளர்கள் ஈடுபட்டனர். அதாவது, தியேட்டர்களின் உட்புறம், வெளிபுறம், இருக்கைகள், சுகாதார வளாகங்கள், டிக்கெட் கவுண்ட்டர்கள் என அனைத்து பகுதிகளிலும் தூய்மைப்படுத்தும் பணியும், கிருமிநாசினி தெளிக்கும் பணியும் தீவிரமாக நடந்தது.

இந்த நிலையில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில சினிமா தியேட்டர்கள் மட்டுமே திறக்கப்பட்டன. அதுவும் ஊரகப் பகுதிகளில் தான் திறக்கப்பட்டன. அதாவது, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களிலும் 40 தியேட்டர்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. புதிய படங்களை வெளியிடாததால் ரசிகர்கள் சினிமா தியேட்டர்களுக்கு வர ஆர்வம் காட்டவில்லை. இதனால் பல தியேட்டர்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

இதுகுறித்து சேலத்தில் சினிமா தியேட்டர்கள் உரிமையாளர்கள் கூறும் போது, 7 மாதங்களுக்கு பின்னர் சினிமா தியேட்டர்கள் திறந்தாலும் புதுப்படங்கள் இல்லையெனில் ரசிகர்கள் வருகை குறைவாக இருக்கும். இதனால் சினிமா தியேட்டர்களை திறக்க பெரும்பாலானோர் முன்வரவில்லை. புதுப்படங்கள் வெளியிட அனுமதி கிடைத்த உடன் உடனடியாக தியேட்டர்கள் திறக்கப்படும் என்றனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு சினிமா திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்க மாநில பொருளாளர் இளங்கோவனிடம் கேட்ட போது, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (நேற்று) 40 தியேட்டர்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. புதுப்படங்கள் வெளியிடாததால் பெரும்பாலான தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. மேலும் புதுப்படங்கள் வெளியிடுவது தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. அதனால் 4 மாவட்டங்களிலும் ஓரிரு நாட்களில் அனைத்து தியேட்டர்களும் திறக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்