பிரபு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா - அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி
கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பிரபுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
கண்டாச்சிமங்கலம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் தாய் நகர் பகுதியில் வசித்து வருபவர் பிரபு (வயது 34). கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. உறுப்பினரான இவர், கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலையிழந்து பாதிக்கப்பட்ட பலதரப்பட்ட மக்களுக்கும் அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தார். மேலும் அ.தி.மு.க.வில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை பூத் கமிட்டி அமைத்தல் தொடர்பான ஆலோசனை கூட்டங்களிலும் கலந்துகொண்டு கட்சிப் பணியையும் தீவிரமாக மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த 8-ந்தேதி பிரபு எம்.எல்.ஏ. காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து நேற்று முன்தினம் அவருக்கும், அவரது மனைவி சவுந்தர்யாவுக்கும், தியாகதுருகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள நடமாடும் கொரோனா தொற்று பரிசோதனை வாகனத்தின் மூலம் உமிழ்நீர் எடுக்கப்பட்டது.
பின்னர் அவை பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனை முடிவு அன்று இரவே வெளியானது. இதில் பிரபு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரது மனைவி சவுந்தர்யாவுக்கு தொற்று பாதிப்பு இல்லை.
இதையடுத்து பிரபு எம்.எல்.ஏ., கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே பிரபு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரது தந்தை அய்யப்பா மற்றும் அவரது குடும்பத்தினர், வீட்டு வேலை ஆட்கள் உள்ளிட்டோருக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் வட்டார மருத்துவ அலுவலர் சந்தோஷ்குமார், டாக்டர்கள் மணிகண்டன், ஆதிலட்சுமி ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் தாய் நகர் பகுதியில் நேற்று வீடு வீடாக சென்று யாருக்காவது காய்ச்சல், சளி, இருமல் அறிகுறி உள்ளதா? என்று கேட்டறிந்து, அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டனர்.