புதிய படங்கள் வெளியாகாததால் மாவட்டத்தில் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை

தமிழகத்தில் நேற்று முதல் தியேட்டர்கள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் புதிய படங்கள் ஏதும் வெளியாகாததால் சிவகங்கை மாவட்டத்தில் நேற்று தியேட்டர்கள் திறக்காமல் பூட்டிய நிலையில் இருந்தது.

Update: 2020-11-10 22:00 GMT
சிவகங்கை,

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவித்தாலும் தியேட்டர்கள் மட்டும் திறக்க உத்தரவு இல்லாமல் கடந்த 7 மாதத்திற்கும் மேல் பூட்டிய நிலையில் முடங்கி கிடந்தது. இதையடுத்து தியேட்டர்கள் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கோரிக்கை விடுத்து தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக முடங்கிய தியேட்டர்களை திறக்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து நேற்று முதல் தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து பல மாதங்களாக பூட்டிய நிலையில் தியேட்டர்கள் இருந்ததால் தியேட்டர்களை திறந்து சுத்தம் செய்தல், சேதமான இருக்கைகளை சரி செய்தல், கிருமி நாசினி தெளித்தல், சமூக இடைவெளியில் செல்ல அறிவுறுத்தும் வகையில் வாசகங்களை எழுதுதல் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை, மானாமதுரை உள்ளிட்ட பகுதியில் 20-க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் உள்ளன.

தியேட்டர்கள் திறக்க அரசு அனுமதி வழங்கியதையடுத்து கடந்த வாரம் காரைக்குடி, மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை உள்ளிட்ட பகுதியில் உள்ள தியேட்டர்களில் அதன் பணியாளர்கள் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். பொதுவாக ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது பல்வேறு முன்னணி நடிகர்கள் நடித்த புதிய திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியாகும். அப்போது தியேட்டர்கள் விழாக்கோலமாக காணப்படும்.

இந்த நிலையில் இன்னும் 2 நாட்களில் இந்தாண்டு தீபாவளிக்கு முன்னணி நடிகர்கள் நடித்த திரைப்படம் ஏதும் வராததால் தியேட்டர்கள் எல்லாம் களையிழந்து காணப்படுகிறது.

இதுகுறித்து தியேட்டர்கள் உரிமையாளர்கள் கூறியதாவது:-

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது பல முன்னணி நடிகர்கள் நடித்த திரைப்படம் வெளியிடப்படும். அன்றைய தினம் கூட்டம் அலைமோதும். இதனால் தியேட்டர்களில் வசூல் குவியும். ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடந்த 7 மாத காலமாக தியேட்டர்கள் மூடிய நிலையில் தற்போது அரசு திறக்க அனுமதி வழங்கியது ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், புதிய திரைப்படங்கள் ஏதும் வராததால் தியேட்டர்கள் திறக்க முடியாது. ஏனெனில் பல முன்னணி நடிகர்கள் நடித்த திரைப்படம் வெளியானால் மட்டுமே அன்றைய தினம் கூட்டம் அதிகரித்து வசூலும் அதிகரிக்கும். ஆனால் இந்த தீபாவளிக்கு முன்னணி நடிகர்கள் படம் வராததால் தியேட்டர்களை திறக்கும் எண்ணம் தற்போது எங்களிடம் இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்