ஆயுஷ்மான் திட்டத்தில் பயனாளிகளை சேர்க்க ஆலோசனை ரேஷன், ஆதார் கார்டு நகல் வழங்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

ஆயுஷ்மான் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் விடுபட்ட பயனாளிகளை சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ரேஷன், ஆதார் கார்டு நகல்களை ஒப்படைக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Update: 2020-11-10 21:19 GMT
பாகூர், 

புதுச்சேரியில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஒரு லட்சம் குடும்பங்களுக்கு கடந்த 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கீட்டின்படி மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் என்ற மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை பெற முடியும்.

ஏம்பலம் தொகுதி மக்களுக்கு காப்பீட்டு திட்டம் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பிள்ளையார்குப்பத்தில் உள்ள மாணவியர் விடுதியில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார். சுகாதார இயக்க இயக்குனர் ஸ்ரீராமுலு, ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்ட நோடல் அதிகாரி டாக்டர் அனந்த லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆதார் கார்டு

கூட்டத்தில், மத்திய அரசின் ஆயுஷ்மான் காப்பீட்டு திட்டத்தில் விடுபட்ட பயனாளிகளை பட்டியலில் இணைப்பது, புதுச்சேரி அரசு செயல்படுத்த உள்ள மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு அடையாள அட்டை வழங்குவது தொடர்பாக அங்கன்வாடி ஊழியர்கள், சுகாதாரத்துறை பணியாளர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.

ஏம்பலம் தொகுதி மக்கள் தங்களது குடும்ப அட்டை நகல், குடும்ப உறுப்பினர்களின் ஆதார் கார்டு நகல், 2 புகைப்படம் ஆகியவற்றை அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் அளிக்க வேண்டும். இப்பணிகளை அங்கன்வாடி, சுகாதார பணியாளர்கள் அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

கூட்டத்தில், கரிக்கலாம்பாக்கம் சமுதாய நல வழிமைய மருத்துவ அதிகாரி ரகுநாத், கிருமாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி நாராயணன், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை திட்ட அதிகாரி ரட்சனா, குழந்தைகள் நலத்திட்ட அதிகாரிகள் அமுதா, வடிவேலு, கிளாரா, சிவக்குமார், சிவசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்