பால்கர் மாவட்டத்தில் ஒரே நாளில் 5 முறை நிலநடுக்கம் பொதுமக்கள் பீதி

பால்கர் மாவட்டத்தில் ஒரே நாளில் 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது மக்கள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-11-10 20:07 GMT
மும்பை, 

பால்கர் மாவட்டத்தில் தகானு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. லேசான அளவில் ஏற்படும் இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படுவது இல்லை. எனினும் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது அப்பகுதி மக்கள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. எனவே இதுகுறித்து மத்தியஅரசு ஆய்வு செய்து வருகிறது.

இந்தநிலையில் பால்கர் மாவட்டம் தலசேரியில் நேற்று முன்தினம் அதிகாலை 5.30 மணிக்கு 3.4 ரிக்டர் அளவு கோலி்ல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு அதேநாளில் மீண்டும் 4 தடவை நில நடுக்கம் ஏற்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

பொது மக்கள் பீதி

இதில் தலசேரி தாலுகா பகுதியில் மதியம் 1.43 மணிக்கு 2.4 ரிக்டர், 2.20 மணிக்கு 2.8 ரிக்டர், மாலை 4.17 மணிக்கு 3.4 ரிக்டர், கடைசியாக இரவு 9.19 மணிக்கு 3.1 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவானதாக பால்கர் மாவட்ட பேரிடர் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரி விவேகானந்த் கதம் கூறினார்.

எனினும் இந்த நிலநடுக்கங்களால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். ஒரே நாளில் 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது பால்கர் பகுதி மக்கள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்