கூடலூர் அருகே, குட்டிகளுடன் திரியும் காட்டுயானைகள் - பள்ளிக்கூடம், அரசு அலுவலக கட்டிடங்களை சேதப்படுத்தி அட்டகாசம்
கூடலூர் அருகே குட்டிகளுடன் திரியும் காட்டுயானைகள் பள்ளிக்கூடம், அரசு அலுவலக கட்டிடங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் காட்டுயானைகள் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சி அலுவலகமானது பார்வுட் என்ற இடத்தில் உள்ளது. இதன் அருகில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் கிளை நூலகம் உள்ளது. ஒரே வளாகத்தில் பேரூராட்சி அலுவலகம், பள்ளிக்கூடம், கிளை நூலகம் ஆகியவை செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதிக்குள் குட்டிகளுடன் காட்டுயானைகள் புகுந்தன. தொடர்ந்து பேரூராட்சி அலுவலகம், அரசு பள்ளிக்கூடம் மற்றும் கிளை நூலகத்தை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன.
அரசு பள்ளிக்கூடத்தின் வகுப்பறை கதவுகளை காட்டுயானைகள் உடைத்து சேதப்படுத்தின. தொடர்ந்து கிளை நூலகத்தின் உள்ளே புகுந்த குட்டியானைகள் அங்கிருந்த மேஜை, நாற்காலிகள் மற்றும் புத்தகங்கள் வைக்கப்பட்டு இருந்த அலமாரிகளை உடைத்தன. இதில் புத்தகங்கள் கீழே சிதறின. மேலும் பேரூராட்சி அலுவலகத்தில் பொருட்கள் இருப்பு வைக்கும் அறைகளை காட்டுயானைகள் உடைத்து சேதப்படுத்தின. மேலும் அங்கு வைத்திருந்த பொருட்களும் சேதம் ஆகியது. இதில் சுமார் ரூ.6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.இதை நேற்றுக்காலை அப்பகுதி பொதுமக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஓவேலி வனத்துறையினர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு பேரூராட்சி செயல் அலுவலர் நாகராஜ் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர்.
அப்போது பொதுமக்கள் கூறியதாவது:-
கூடலூர் பகுதியில் காட்டுயானைகள் அட்டகாசம் தினமும் இருந்து வருகிறது. குட்டிகளுடன் கூடிய காட்டுயானைகள் கூட்டம் ஊருக்குள் வந்து பேரூராட்சி அலுவலகம், அரசு பள்ளிக்கூடம், கிளை நூலகத்தை சூறையாடி உள்ளது. கட்டிடத்துக்குள் கதவுகளை உடைத்துக்கொண்டு குட்டியானைகள் உள்ளே நுழைந்து விடுவதால், அவைகளை மீட்க காட்டுயானைகள் பெரிய அளவில் கட்டிடங்களை சேதப்படுத்துகின்றன. இதனால் மாலை நேரம் தொடங்கியதும், வெளியில் நடமாட அச்சமாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
பின்னர் வனத்துறையினர் கூறும்போது, ஓவேலி பகுதியில் சூண்டி, லாரஸ்டன் ஆகிய இடங்களில் 9 காட்டுயானைகள் கூட்டமாக முகாமிட்டுள்ளது. ஆனால் கெல்லி, ஆத்தூர், பாரம், பார்வுட் பகுதியில் குட்டியுடன் ஒரு காட்டுயானை மட்டுமே முகாமிட்டுள்ளது. எனவே அந்த யானை குட்டியுடன் வந்து சேதப்படுத்தி இருக்கலாம் என்றனர்.
ஊட்டியில் இருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக சிறியூர் நோக்கி நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு அரசு பஸ் வந்தது. பஸ்சை டிரைவர் போஜன் ஓட்டினார். மாவனல்லா பகுதியில் திடீரென சாலையின் குறுக்கே காட்டுயானை ஒன்று வந்தது. இதை கண்ட டிரைவர் போஜன், உடனே பஸ்சை நிறுத்தினார். அப்போது காட்டுயானை வேகமாக ஓடி வந்து, துதிக்கையால் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்தது. இதனால் பயணிகள் பயத்தில் அலறினர். தொடர்ந்து வந்த வழியே பின்னோக்கி பஸ் இயக்கப்பட்டது. அங்கு சுமார் அரை மணி நேரம் காட்டுயானை நின்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மசினகுடி போலீசார் மற்றும் வனத்துறையினர் காட்டு யானையை விரட்டினர்.