தொற்று பாதித்தவர்களை விட குணமடைந்தோர் அதிகம்

புதுவையில் தொற்று பாதித்தவர்களை விட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகமாக உயர்ந்தது.

Update: 2020-11-09 21:03 GMT
புதுச்சேரி, 

புதுவை மாநிலத்தில் தொற்று பாதிப்பு தினந்தோறும் புதுப்புது உச்சத்தை தொட்டது. அதேபோல் உயிரிழப்பும் அதிகரித்தது. இதையொட்டி அரசு எடுத்த தடுப்பு நடவடிக்கை மற்றும் மருத்துவ சிகிச்சையை தொடர்ந்து கடந்த ஒருமாதமாக கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. உயிரிழப்பும் சரிந்துள்ளது.

நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 530 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 63 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 145 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது பாதிக்கப்பட்டவர்களை விட அதிகம் ஆகும். ஒரே ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளார்.

உயிரிழப்பு 1.68 சதவீதம்

புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 3 லட்சத்து 41 ஆயிரத்து 534 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 35 ஆயிரத்து 900 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 1,086 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அதாவது 399 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 687 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெறுகின்றனர். 34 ஆயிரத்து 212 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை 602 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 495 பேர் புதுச்சேரியையும், 56 பேர் காரைக்காலையும், 44 பேர் ஏனாமையும், 7 பேர் மாகியையும் சேர்ந்தவர்கள் ஆவர். புதுவை மாநிலத்தில் உயிரிழப்பு 1.68 சதவீதமாகவும், குணமடைவது 95.30 சதவீதமாகவும் உள்ளது.

மேலும் செய்திகள்