வாணியம்பாடி அருகே ராணுவ வீரரை கொல்ல முயற்சி மனைவி, கள்ளக்காதலன் கைது

வாணியம்பாடி அருகே ராணுவவீரரை கொலை செய்ய முயன்ற மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-11-09 05:31 GMT
வாணியம்பாடி,

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயத்தை அடுத்த பூங்குளம் பலப்பநத்தம் பகுதியை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (வயது 36). ராணுவவீரர். இவரது மனைவி வானதி (30). மரிமானிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (25) கார் டிரைவர். இவருக்கும், வானதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு விநாயகமூர்த்தி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 5-ந் தேதி இரவு விநாயக மூர்த்தி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது மனைவி வானதியும், ஜெயகுமாரும் சேர்ந்து அவரை தலையணையால் முகத்தில் அழுத்தி கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

இதனால் மூச்சு விடமுடியாமல் தவித்த விநாயகமூர்த்தி, ஜெயக்குமாரின் கை விரலை பலமாக கடித்து உள்ளார். இதில் காயமடைந்த ஜெயகுமார் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். வீட்டுக்குள் அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்த போது விநாயகமூர்த்தி நெஞ்சு வலிப்பதாக கூறி துடித்துள்ளார்.

உடனடியாக அவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுதொடர்பாக ஆலங்காயம் போலீஸ் நிலையத்தில் விநாயகமூர்த்தி புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜ் விசாரணை மேற்கொண்டார். இதில் வானதி, ஜெயகுமாருடன் சேர்த்து கணவரை கொலை செய்ய முயற்சி மேற்கொண்டது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து வானதி மற்றும் ஜெயகுமார் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்