தற்காலிக ஜெயிலில் செல்போன் பயன்படுத்தியதாக புகார் அர்னாப் கோஸ்வாமி தலோஜா சிறைக்கு மாற்றப்பட்டார் - ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு
தற்காலிக ஜெயிலில் செல்போன் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அர்னாப் கோஸ்வாமி தலோஜா சிறைக்கு மாற்றப்பட்டார். அவரது ஜாமீன் மனு மீது மும்பை ஐகோர்ட்டில் இன்று தீர்ப்பு கூறப்பட உள்ளது.
மும்பை,
ராய்காட் மாவட்டம் அலிபாக்கை சோ்ந்த கட்டிட உள்வடிவமைப்பாளர் அன்வய் நாயக்(வயது53) மற்றும் அவரது தாயை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஆங்கில டி.வி. சேனலான ரிபப்ளிக் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட 3 பேர் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொரோனாவை தொடர்ந்து அலிபாக் பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக சிறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர்.
இந்தநிலையில் அர்னாப் கோஸ்வாமி நேற்று திடீரென தலோஜா சிறைக்கு மாற்றப்பட்டார். இதற்காக அவர் வேனில் ஏற்றி அழைத்து செல்லப்பட்டபோது, நிருபர்களை நோக்கி சத்தமாக பேசினார். அப்போது, சனிக்கிழமை மாலையில் அலிபாக் ஜெயிலரால் நான் தாக்கப்பட்டேன். எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. என்னை வக்கீலிடம் பேச அனுமதிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.
இதற்கிடையே அர்னாப் கோஸ்வாமி தலோஜா சிறைக்கு மாற்றப்பட்டதற்கான காரணத்தை போலீசார் வெளியிட்டு உள்ளனர். கைதானதை தொடர்ந்து அவரது செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனாலும் அடைக்கப்பட்டு இருந்த பள்ளிக்கூடத்தில் அவர் செல்போன் பயன்படுத்தியதும், சமூக வலைத்தளத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்ததும் கண்டறியப்பட்டதால் தலோஜா சிறைக்கு மாற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே அர்னாப் கோஸ்வாமி தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பை இன்று(திங்கட்கிழமை) மும்பை ஐகோர்ட்டு அறிவிக்க உள்ளது. இதுகுறித்த தகவல் நேற்று முன்தினம் இரவு மும்பை ஐகோர்ட்டின் இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் இன்று பிற்பகல் 3 மணியளவில் அறிவிக்க உள்ளனர்.
இதே நேரத்தில் அர்னாப் கோஸ்வாமியை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு போலீசார் அலிபாக் செசன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையும் இன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.