போலீஸ் நிலையங்களில் அளித்த பொதுமக்களின் புகார் மனுக்களுக்கு தீர்வு காண சிறப்பு முகாம் - தூத்துக்குடி உள்ளிட்ட 8 இடங்களில் நடந்தது
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் போலீசில் அளித்த புகார் மனுக்களுக்கு தீர்வு காணுவதற்கான சிறப்பு முகாம் 8 இடங்களில் நேற்று நடந்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அளித்து உள்ள புகார் மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில் உடனடி தீர்வு முகாம் நேற்று நடந்தது. தூத்துக்குடி சிதம்பர நகரில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் திருமண மண்டபம் மற்றும் புதுக்கோட்டை சத்யா மகாலில் நடந்த முகாம்களை தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது உடனடி தீர்வு காணும் வகையில் இந்த முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே, கடந்த செப்டம்பர் மாதம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நடந்த முகாம்களின் மூலம் 500-க்கும் மேற்பட்ட புகார் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. நேற்று 2-ம் கட்டமாக இந்த முகாம் மாவட்டம் முழுவதும் 8 இடங்களில் நடந்தது. இதில் மனுதாரர், எதிர்மனுதாரர் ஆகிய இரு தரப்பினரையும் வரவழைத்து சட்டத்துக்கு உட்பட்டு விசாரணை நடத்தி தீர்வு காணப்பட்டது.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) சஞ்சீவ்குமார், இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தராஜன் (தென்பாகம்) , ஜெயப்பிரகாஷ் (மத்தியபாகம்) , அன்னராஜ் (முத்தையாபுரம்) , ஜெயந்தி (தாளமுத்துநகர்) , கோகிலா (தெர்மல்நகர்) , மயிலேறும்பெருமாள் (போக்குவரத்துபிரிவு) மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.