காட்டுப்பன்றிக்கு வைத்த சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தைப்புலி பலி 2 பேர் கைது

குன்னூர் அருகே காட்டுப்பன்றிக்கு வைத்த சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தைப்புலி இறந்தது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-11-08 16:18 GMT
ஊட்டி, 

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சேலாஸ் பகுதியில் தனியார் தேயிலை தோட்டங்கள் உள்ளன. இதைச்சுற்றி உள்ள வனப்பகுதிகளில் இருந்து வனவிலங்குகள் அடிக்கடி தோட்டங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று தேயிலை தோட்டத்தில் சிறுத்தைப்புலி ஒன்று இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் குன்னூர் வனச்சரகர் சசிகுமார் தலைமையில் வனவர்கள் சபரிசன், ராஜ்குமார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்ததில் சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தைப்புலி இறந்தது தெரியவந்தது. பின்னர் கால்நடை டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு சிறுத்தைப்புலியின் உடற்கூறுகள் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

வனவிலங்குகள் வேட்டை

இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் அக்கம் பக்கத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில், கீழ் கக்காச்சியை சேர்ந்த முருகன் (வயது 38), கிளிஞ்சாடாவை சேர்ந்த செல்வன் (40) ஆகிய 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், இருவரும் சேர்ந்து கடந்த சில மாதங்களாக வனப்பகுதிகளை ஒட்டி உள்ள தேயிலை தோட்டங்களில் சுருக்கு கம்பி வைத்து காட்டுப்பன்றி, மான், முயல் போன்ற வனவிலங்குகளை வேட்டையாடியது தெரியவந்தது.

மேலும் வனப்பகுதியில் இருந்து வரும் காட்டுப்பன்றியை வேட்டையாடுவதற்காக தேயிலை தோட்டம் பகுதியில் சுருக்கு கம்பி வைத்ததும் இதில் சிறுத்தைப்புலி சிக்கி உயிரிழந்ததும் தெரியவந்தது. இதனை 2 பேரும் ஒப்புக்கொண்டனர்.

2 பேர் கைது

இதைத்தொடர்ந்து வனத்துறையினர் 2 பேரையும் கைது செய்தனர். வனவிலங்குகளை வேட்டையாடினால் வன பாதுகாப்பு சட்டத்தின்படி 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு குன்னூர் கடமானை வேட்டையாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. வனவிலங்குகள் வேட்டையாடுவதை தடுக்க சுருக்கு கம்பி வைப்பது, மின் வேலி அமைப்பது போன்றவற்றை வனத்துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்