இரட்டிப்பு பணம் தருவதாகக்கூறி ஆன்லைன் மூலம் ரூ.50 கோடி மோசடி செய்தவர் கைது

இரட்டிப்பு பணம் தருவதாகக்கூறி ஆன்லைன் மூலம் ரூ.50 கோடி மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-11-08 15:45 GMT
கோவை,

கோவை பீளமேடு சிவகாமி லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் ரிது வர்ணன்(வயது 37). இவர் ஆன்லைனில் டிரேடிங் தொழில் செய்வதாகவும், அதில் பணத் தை முதலீடு செய்பவர்களுக்கு குறிப்பிட்ட கால அவகாசத்தில் அந்த பணத்தை இரட்டிப்பாக திரும்ப தருவதாக அறிவித்து இருந்தார். ஆன்லைனில் வெளியான அந்த அறிவிப்பை பார்த்து கோவை மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 600 பேர் முதலீடு செய்தனர். இதற்கிடையில் சில முதலீட்டாளர்களுக்கு அறிவித்தபடி இரட்டிப்பு பணம் வழங்கியதாக ஆன்லைனில் அவர் பொய் அறிவிப்பை வெளியிட்டார். இதை பார்த்து மகிழ்ச்சியடைந்த முதலீட்டாளர்கள், மேலும் பலரை ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்ய கூறி சேர்த்துவிட்டனர்.

ரூ.50 கோடி வரை மோசடி

ஆனால் ரிது வர்ணன் முதலீட்டார்களுக்கு அவர்கள் கட்டிய பணத்தையும், இரட்டிப்பு பணத்தையும் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றம் அடைந்த முதலீட்டாளர்கள் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். குறிப்பாக கோவை நகரை சேர்ந்த கேசவன்(35) என்பவர், ரிது வர்ணனிடம் ரூ.1½ லட்சம் முதலீடு செய்தேன். ஆனால் அவர் அதற்கான இரட்டிப்பு பணத்தையோ அல்லது அந்த பணத்தையே திரும்ப தரவில்லை என்று புகார் அளித்து இருந்தார். இவரை தொடர்ந்து மேலும் பலர் புகார் அளித்தனர்.

இதன் மூலம் ரிது வர்ணன் ரூ.50 கோடி வரை பணம் பெற்று மோசடி செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று அவரை கைது செய்தனர்.

வாக்குமூலம்

ரிது வர்ணன் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறி உள்ளதாவது:-

ஆன்லைனில் டிரேடிங் முதலீடு வெப்சைட்டை தொடங்கி, முதலீடு செய்ய அழைப்பு விடுத்து இருந்தேன். அதில் முதலீடு செய்து உள்ளதாக போலியாக பலரின் பெயரை வெளியிட்டேன். அதை பார்த்து பலர் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை முதலீடு செய்தனர். இதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் கிடைத்தது. அதை வைத்து பல்வேறு இடங்களில் சொத்து வாங்கினேன். பின்னர் முதலீடு செய்தசிலர் பணத்தை திரும்ப கேட்டனர். கொரோ னாவால் பணத்தை திருப்பி வழங்க முடியவில்லை என்று கூறினேன். இதனால் பலர் போலீசில் புகார் அளித்ததால், மாட்டிக்கொண்டேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார். 

மேலும் செய்திகள்