கிருஷ்ணகிரியில் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது

கிருஷ்ணகிரி இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

Update: 2020-11-08 14:48 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், நேரு யுவகேந்திரா-மத்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் சேஷாங்ராவுலா திட்ட பணிகள் குறித்து விளக்கம் அளித்தார்.

இந்த கூட்டத்தில், 5 மாத காலமாக கொரோனா தொடர்பாக நேரு யுவகேந்திரா மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடத்திய மாதிரி கிராம செயல்பாடுகளை கலெக்டர் கேட்டறிந்தார். மேலும், இந்த ஆண்டு நேரு யுவகேந்திரா நடத்தும் ஒன்றிய அளவிலான விளையாட்டு போட்டிகள், மாவட்ட அளவிலான கலை விழா, பெண்களுக்கு வழங்கப்படும் தையல் பயிற்சிகள், அழகு கலை பயிற்சிகள், இளைஞர்களுக்கான கணினி பயிற்சிகள், பெண் கல்வி, பெண் குழந்தைகள் பாதுகாப்பு போன்ற விழிப்புணர்வு முகாம்களில் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என கலெக்டர் கேட்டுக்கொண்டார்.

பயிற்சி கையேடு

பின்னர், யுனிசெப்-மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பாக வளரினம் பருவத்தினர் தன் உரிமை மேம்பாடு மற்றும் குழந்தைகள் திருமணம் முடிவுக்கு கொண்டு வருதல் திட்ட பணிகள் குறித்து இளம் தென்றல் பெட்டகம் பயிற்சி கையேட்டை கலெக்டர் வெளியிட்டார். தொடர்ந்து அரசியலமைப்பு முன்னுரை கையெழுத்து இயக்க விழிப்புணர்வு பதாகையில் கலெக்டர் கையொப்பமிட்டு தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மைய மேலாளர் பிரசன்ன பாலமுருகன், இந்தியன் வங்கி மேலாளர் மகேந்திரன், யுனிசெப் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாகர், நேரு யுவகேந்திரா கிருஷ்ணகிரி ஒருங்கிணைப்பாளர் அப்துல்காதர் மற்றும் தேசிய இளைஞர் தொண்டர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், இளைஞர் மன்ற பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்