பனப்பாக்கம் அருகே டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.3 லட்சம் வழிப்பறி மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
பனப்பாக்கம் அருகே டாஸ்மாக் கடை ஊழியரிடம் ரூ.3 லட்சம் வழிப்பறி செய்து சென்ற 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
நெமிலி,
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அருகே உள்ள துறையூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையில் உளியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஞானவேல் என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பணியை முடித்துக்கொண்டு கடையை பூட்டிவிட்டு விற்பனையான தொகை ரூ.3 லட்சத்தை கைப்பையில் எடுத்துக்கொண்டு மோட்டார்சைக்கிளில் கிளம்பினார். சுமார் 100 மீட்டர் கடந்து சென்றபோது இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் ஞானவேலை வழிமறித்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
ரூ.3 லட்சம் வழிப்பறி
பின்னர் அவர் கையிலிருந்த ரூ.3 லட்சத்தை பறித்துக் கொண்டு மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த விற்பனையாளர் ஞானவேல் இதுகுறித்து நெமிலி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.