விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

Update: 2020-11-08 09:52 GMT
விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 2 லட்சத்து 87 ஆயிரத்து 306 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 16 ஆயிரத்து 412 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

15 ஆயிரத்து 226 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 3,473 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. வீடுகளில் 24 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

14 பேருக்கு கொரோனா

மாவட்டத்தில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்த 28 வயது நபர், மண்டபசாலையை சேர்ந்த 17 வயது சிறுவன், அருப்புக்கோட்டை நெசவாளர் காலனியை சேர்ந்த 67 வயது மூதாட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 55 வயது நபர் உள்பட மாவட்டம் முழுவதும் 14 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,426 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டத்தில் நேற்றும் பெரும்பாலும் கிராம பகுதிகளில் உள்ளவர்களுக்கே பாதிப்பு ஏற்பட்ட நிலையில் கிராம பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், மருத்துவ பரிசோதனைகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடவடிக்கை

மருத்துவ பரிசோதனை எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்ட நிலையிலும், இன்னும் 3,400-க்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படாத நிலை உள்ளது. நிலுவையில் உள்ள மருத்துவ பரிசோதனை முடிவுகளை அடுத்த 2 தினங்களில் தெரிவிக்கவும், தினசரி எடுக்கப்படும் மருத்துவ பரிசோதனையின் முடிவுகளை மறு நாளே வெளியிடவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

தொடர்ந்து மாநில சுகாதார துறை வெளியிடும் பட்டியலுடன், மாவட்ட பட்டியல் முரண்படும் நிலை நீடிக்கிறது. இதனையும் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்