மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் சார்பில் ராமேசுவரம் கடலில் 10 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன

மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலையம் சார்பில் ராமேசுவரம் கடலில் 10 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன.

Update: 2020-11-08 09:14 GMT
ராமேசுவரம், 

ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடம் வடக்கு கடல் பகுதியான பாக் ஜலசந்தி கடலில் நேற்று மண்டபம் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் சார்பில் இறால் மீன் குஞ்சுகள் கடலில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக மண்டபம் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து 10 லட்சம் இறால் மீன் குஞ்சுகள் தண்ணீர் நிரப்பப்பட்ட 15-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் கேன்களில் வைத்து வாகனம் மூலம் தங்கச்சிமடம் வடக்கு துறைமுக பகுதிக்கு கொண்டுவரப்பட்டது.

தொடர்ந்து மீன்பிடி படகுகளில் அந்த கேன்கள் ஏற்றப்பட்டு மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி ஜெயக்குமார் தலைமையில் 10 லட்சம் மீன் குஞ்சுகள் வடக்கு பகுதியான பாக் ஜலசந்தி கடலில் விடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய மேலாண்மைக்குழு உறுப்பினர் முரளிதரன், விஞ்ஞானிகள் ஜான்சன், சங்கர், சக்திவேல், தமிழ்மணி, ரமேஷ் குமார், அணிக்குட்டன், பா.ஜனதா மாவட்ட இளைஞரணி தலைவர் மோடி முனீஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

வளர்ப்பு

அப்போது மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி ஜெயக்குமார் கூறியதாவது:-மீன்பிடிக்க சென்று வரும் மீனவர்களிடம் இருந்து தாய் இறால்மீன்கள் வாங்கப்பட்டு ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள கடல் நீர் நிரப்பப்பட்ட தொட்டிகளில் வளர்க்கப்பட்டு வரும். அந்த இறால் மீன்கள் முட்டை இட்டு குஞ்சு பொரித்த பின்பு அந்த குஞ்சுகளும் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு அதன் பின்பு கடலில் விடப்பட்டு வருகின்றன.

தற்போது தங்கச்சிமடம் கடல் பகுதியில் 10 லட்சம் இறால் மீன் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. அதுபோல் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இதுவரை மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் ஒரு கோடியே 10 லட்சம் இறால் குஞ்சுகள் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காக கடலில் விடப்பட்டுள்ளன. கடலில் விடப்படும் இந்த இறால் குஞ்சுகள் 5 மாதத்திற்குள் நன்கு வளர்ந்துவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்