வேப்பேரியில், 10-வது மாடியில் இருந்து தவறி விழுந்து 7 வயது சிறுவன் பலி
வேப்பேரியில் 10-வது மாடியில் இருந்து தவறி விழுந்து 7 வயது சிறுவன் பலியானான்.
சென்னை,
சென்னை வேப்பேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 10-வது தளத்தில் வசித்து வருபவர் ரோகித். சவுகார்பேட்டையில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவருடைய மகன் ரிஷி (வயது 7). இந்த சிறுவன் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த சில மாதங்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் பாட வகுப்புகளை முடித்துக்கொண்டு, ரிஷி தங்கள் குடியிருப்பில் உள்ள நண்பர்களுடன் விளையாடி பொழுதை கழித்து வந்தான்.
ரிஷி நேற்று வழக்கம்போல தன்னுடைய வீட்டின் பால்கனியில் உள்ள கண்ணாடி அருகே நின்று விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக கண்ணாடி மீது வேகமாக மோதியதில் உடைந்து சிதறியது. இதையடுத்து துரதிருஷ்டவசமாக 10-வது மாடியில் இருந்து ரிஷியும் கீழே விழுந்தான்.
தரையில் விழுந்த வேகத்தில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சிக்கி ரிஷி பலியானான். இது அந்த குடியிருப்புவாசிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வேப்பேரி போலீஸ் நிலையத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் ரிஷியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 7 வயது சிறுவன் மாடியில் இருந்து விழுந்து பலியான சம்பவம் குடியிருப்புவாசிகள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.