காஞ்சீபுரம், காக்களூரில் டாஸ்மாக் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
காஞ்சீபுரம், காக்களூரில் டாஸ்மாக் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம்,
டாஸ்மாக் ஊழியர்களுக்கு 2019 மற்றும் 2020-ம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் உடனடியாக வழங்க வேண்டும். ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதிகப்படியான நேரம் வேலை வாங்காமல் 8 மணி நேரம் வேலை மற்றும் முறையான வார விடுமுறை அளிக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓரிக்கையில் உள்ள காஞ்சீபுரம் மாவட்ட மேலாளர் அலுவலகம் எதிரே டாஸ்மாக் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு அரசு தலைமை வகித்தார், மாவட்ட தலைவர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் போராட்டத்தின்போது மாநில அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். அரசு உடனடியாக தலையிடவில்லை என்றால் விரைவில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக எச்சரிக்கை விடுத்தனர்.
திருவள்ளூரை அடுத்த காக்களூரில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு நேற்று திருவள்ளூர் மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் எஸ்.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சந்திரன், ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட தலைவர் தாமோதரன், அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பிரகாஷ்பாபு, பஞ்சாட்சரம், மோசஸ், சேகர், முரளி, சத்யா, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
இதில் திரளான டாஸ்மாக் பணியாளர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் டாஸ்மாக் கடை பணியாளர்களுக்கு 30 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும், அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் இ.எஸ்.ஐ. என்ற திட்டத்தை அமல்படுத்த வேண்டும், டாஸ்மார்க் தொழிலாளர்கள் நலன் கருதி விற்பனை நேரத்தை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை அமல்படுத்த வேண்டுமென கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென பெய்த மழையிலும் டாஸ்மாக் ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.