அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட குழந்தை சாவு - உறவினர்கள் முற்றுகை

பழவேற்காடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட குழந்தை பரிதாபமாக இறந்தது. இதையடுத்து உறவினர்கள், மீனவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-11-06 22:00 GMT
பொன்னேரி,

பொன்னேரியை அடுத்த பழவேற்காட்டில் 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 50 ஆயிரத்திற்கும் மேலான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் மீன்பிடி தொழிலையே நம்பி வசித்து வருகின்றனர். பழவேற்காடு ஏரி அருகே தமிழக அரசின் சுகாதார துறையின் அரசு ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இதில் 2 டாக்டர்கள், 3 நர்சுகள், ஒரு மருந்தாளுநர் உள்பட பலர் வேலை செய்கின்றனர். இந்த அரசு ஆஸ்பத்திரிக்கு நாள்தோறும் ஏராளமானோர் பல்வேறு நோய்களுக்காக சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.

இங்கு டாக்டர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்வது இல்லை என்ற குற்றச்சாட்டு பொதுமக்களிடையே உள்ளது. அரங்கன்குப்பம் கிராமத்தை சேர்ந்த குமார் (வயது 40), லட்சுமி தம்பதியின் 25 நாட்களே ஆன ஆண் குழந்தையை நேற்று முன்தினம் சிகிச்சைக்காக பழவேற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அப்போது அங்கு டாக்டர்கள் யாரும் இல்லை. நர்சுகள் குழந்தைக்கு சிகிச்சை மேற்கொண்டனர். இந்த நிலையில் இரவு குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

தகவலறிந்த உறவினர்கள், அரங்கன்குப்பம் மீனவர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். நேற்று காலை மீண்டும் மீனவர்கள் அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ராணி, பொன்னேரி ஆர்.டி.ஓ. செல்வம், தாசில்தார் மணிகண்டன், துணை தாசில்தார் வாசுதேவன், வருவாய் ஆய்வாளர் நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி, உள்ளாட்சி பிரதிநிதிகள், மீனவர்கள், நிர்வாகிகள் அடங்கிய குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பழவேற்காடு அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் டாக்டர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்க வாரத்தில் 2 நாட்கள் பெண் டாக்டர்களை பணியில் அமர்த்த வேண்டும். அவசர சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் சேவையை ஆஸ்பத்திரியில் நிறுத்தி வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்து எழுதி கொடுக்கப்பட்டது. இறந்த குழந்தைக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என பொன்னேரி தாசில்தார் தெரிவித்தார். இதனை தொடர்ந்து மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி இறந்த குழந்தையின் குடும்பத்தினருக்கு தி.மு.க. சார்பில் ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என்று கூறினார்.

தொடர்ந்து பழவேற்காடு மீனவர் கூட்டுறவு சங்கங்களின் ஒன்றியத்தின் துணைத்தலைவர் சந்திரசேகர் பொன்னேரி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன் சார்பில் இறந்த குழந்தையின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். இதை தொடர்ந்து மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். குழந்தை இறந்து போனதற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பழவேற்காடு பஜாரில் வியாபாரிகள் கடைகளை அடைத்திருந்தனர்.

மேலும் செய்திகள்