சரத்பவாருடன் தெலுங்கானா மந்திரி திடீர் சந்திப்பு
தெலுங்கானா வேளாண்துறை மந்திரி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை நேற்று திடீரென சந்தித்து பேசினார்.
மும்பை,
தெலுங்கானா மாநில வேளாண்துறை மந்திரியாக இருப்பவர் சிங்கிரெட்டி நிரஞ்சன் ரெட்டி. இவர் நேற்று தேசியவாத காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய வேளாண் துறை மந்திரியுமான சரத்பவாரை புனே மாவட்டம் பாராமதியில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.
மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்ததாக சரத்பவார் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “இந்த சந்திப்பின் போது வேளாண்துறை சந்தித்து வரும் சவால்கள், வேளாண் திட்டங்கள் குறித்த எங்களின் பார்வை, வேளாண்துறையை மேம்படுத்த புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினோம்” என கூறியுள்ளார். இதேபோல தெலுங்கனா வேளாண்துறை மந்திரி பாராமதியில் உள்ள கிரிஷி விஜ்யான் கேந்திராவை பார்வையிட்டார். அப்போது அவர் அங்கு பயன்படுத்தப்பட்டு வரும் தொழில்நுட்பம், செயல்பாடுகளை பாராட்டினார்.