7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர அரசு பள்ளி மாணவர்கள் 26 பேருக்கு - படிப்பு சான்றிதழ் முதன்மை கல்வி அதிகாரி வழங்கினார்

7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர விழுப்புரம் மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் 26 பேருக்கு படிப்பு சான்றிதழை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனுசாமி வழங்கினார்.

Update: 2020-11-06 14:27 GMT
விழுப்புரம்,

அரசு பள்ளிகளில் பிளஸ்-2 முடித்த மாணவ- மாணவிகள் மருத்துவ படிப்புகளில் சேர 7.5 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கி சமீபத்தில் அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் அரசு அறிவித்த 7.5 சதவீத இடஒதுக்கீட்டின்படி மருத்துவ படிப்புகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர். இம்மாணவர்கள் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில்தான் படித்தார்கள் என்பதற்கான படிப்பு சான்றிதழை மாணவ- மாணவிகளுக்கு வழங்க வேண்டுமென அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 24 மாணவ- மாணவிகளுக்கும், கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற 2 பேருக்கும் படிப்பு சான்றிதழ் வழங்குவதற்காக நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர். இம்மாணவ- மாணவிகள் அனைவரும் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை அரசு பள்ளியில்தான் படித்தார்கள் என்பதற்கான படிப்பு சான்றிதழ் தலைமை ஆசிரியர்கள் மூலம் தயாரிக்கப்பட்டது.

இந்த சான்றிதழ் உண்மையானதுதானா? என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனுசாமி தலைமையில் 4 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களான சேகர், ரகு, சீனுமணி, மோகன்குமார் ஆகியோர் கொண்ட குழு மூலம் ஆய்வு செய்யப்பட்டது. இந்த குழுவினர், மாணவ- மாணவிகள் கொண்டு வந்திருந்த 10, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பள்ளி மாற்று சான்றிதழ், நீட் தேர்வு எழுதியதற்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு, நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண் பட்டியல், ஆதார் எண் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு செய்தனர்.

அதன் பிறகு மாணவ- மாணவிகளுக்கு படிப்பு சான்றிதழை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனுசாமி வழங்கினார். இந்த சான்றிதழ் மூலம் மருத்துவ படிப்பில் சேர ஆன்லைன் மூலம் மாணவ- மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்தார். அப்போது முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் சேவியர்சந்திரகுமார், காளிதாஸ், முதன்மை கல்வி அலுவலக கண்காணிப்பாளர் கோகுலகண்ணன், பிரிவு உதவியாளர் ராஜலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்