நீட் தேர்வை கண்டு அஞ்சாமல் சாதிக்கும் எண்ணத்தை வளர்க்க வேண்டும் - மாணவர்களுக்கு முதன்மை கல்வி அதிகாரி அறிவுரை

நீட் தேர்வை கண்டு அஞ்சாமல் சாதிக்கும் எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று மாணவ- மாணவிகளுக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனுசாமி அறிவுரை கூறியுள்ளார்.

Update: 2020-11-06 13:52 GMT
விழுப்புரம்,

இந்தியாவில் பிளஸ்-2 முடித்த மாணவர்கள், மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்து படித்து வருகின்றனர். நீட்தேர்வில் அதிகளவில் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்று வந்தனர். இந்த நிலையை மாற்றி அரசு பள்ளி மாணவர்களும் அதிகளவில் தேர்ச்சி பெறும் வகையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், கோலியனூர், காணை, கண்டமங்கலம், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர், வானூர், முகையூர், மரக்காணம், செஞ்சி, வல்லம், மேல்மலையனூர், மயிலம், ஒலக்கூர் ஆகிய 14 மையங்களிலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திருநாவலூர், உளுந்தூர்பேட்டை, சின்னசேலம், தியாகதுருகம், திருக்கோவிலூர், ரிஷிவந்தியம், சங்கராபுரம், கல்வராயன்மலை ஆகிய 9 மையங்களிலும் முதுகலை ஆசிரியர்கள் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்களை ஊக்குவிக்கிற நிகழ்ச்சி விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சசிகலா தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி கலந்துகொண்டு பள்ளியில் நீட் தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பித்த 38 மாணவிகளுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

கிடைக்கின்ற வாய்ப்புகளை மாணவ-மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்திகொள்ள வேண்டும். நீட் தேர்வு அச்சத்தில் தற்கொலையில் மாணவர்கள் ஈடுபடக்கூடாது. மாணவர்கள் தேர்வை கண்டு அஞ்சாமல், சிறந்த முறையில் தேர்வு எழுதும் மனநிலையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். என்னால் முடியும், நான் சாதிப்பேன் என்ற எண்ணத்தை மாணவர்கள் அதிகளவில் வளர்த்துக்கொள்ள வேண்டும். சமூகத்தில் உயர்ந்த இடத்தில் வர வேண்டும் என்று மாணவர்கள் படிக்கின்றபோதே வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அரசு மருத்துவக்கல்லூரியில் குறைந்த அளவிலான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளை காட்டிலும் அரசு பள்ளிகள் சிறப்பாக செயல்படுவதாகவும், இந்திய வரலாற்றில் தமிழக அரசுதான் நீட் தேர்வு இட ஒதுக்கீடு 7.5 சதவீதம் பெற்றுக்கொடுத்துள்ளது. இதனை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நன்கு உணர்ந்து முயற்சி செய்ய வேண்டும். முயற்சி செய்யாமல் எதுவும் கிடைக்காது. எனவே மாணவர்கள் தொடர் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் அமுதவள்ளி, மைமுன்னிசா, வசுமதி, காங்கேயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்