ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக 98 பேருக்கு கொரோனா தொற்று முதியவர் பலி

ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக 98 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.

Update: 2020-11-06 06:13 GMT
ஈரோடு, 

ஈரோடு மாவட்டத்தில் ஆரம்ப காலத்தில் 70 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதில் ஒருவர் இறந்த நிலையில் 69 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர்.

இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் தீவிர நடவடிக்கையால் 39 நாட்களாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை.

இதனால் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மக்கள் நிம்மதி அடைந்தனர்.

பின்னர் ஈரோடு மாவட்டத்தில் 2-ம் கட்டமாக கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இதன் தாக்கம் மிகவும் தீவரமாக உள்ளது.

கடந்த 5 மாதங்களாகவே தினந்தோறும் குறைந்தது 80 பேர் முதல் அதிக பட்சமாக 190 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக மேலும் 98 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 765 ஆக உயர்ந்துள்ளது.

முதியவர் பலி

இதற்கிடையில் ஈரோடு மாநகர் பகுதியை சேர்ந்த 84 வயது முதியவர் ஒருவர் காய்ச்சல் மற்றும் சளி தொல்லை காரணமாக கடந்த 2-ந்தேதி சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த முதியவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் நேற்று ஒரே நாளில் 99 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மொத்தம் 9 ஆயிரத்து 835 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது 799 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் செய்திகள்