வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம்
வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி நாகையில் அனைத்து விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்,
நாகையில் மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு உறுப்பினர் சரபோஜி தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சம்பந்தம், காவிரி விவசாயிகள் பாதுகாப்போர் சங்கம் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சாமிநடராஜன் கலந்து கொண்டு பேசினார். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் அம்பிகாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விவசாயிகளை பாதிக்கும் மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும். எம்.எஸ். சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையின் படி விவசாயிகளின் உற்பத்திக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.