கவர்னர் கிரண்பெடியுடன் தி.மு.க. அமைப்பாளர்கள் திடீர் சந்திப்பு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்

புதுவை கவர்னர் கிரண்பெடியை புதுவை தி.மு.க. அமைப்பாளர்கள் சந்தித்து பேசினார்கள். அப்போது கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு வலியுறுத்தினர்.

Update: 2020-11-06 04:34 GMT
புதுச்சேரி, 

புதுவை அரசியலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் விரிசல் ஏற்படும் வகையில் சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இதை உறுதிப்படுத்தும் வகையில் காங்கிரஸ், தி.மு.க. நிர்வாகிகள் தங்களது கட்சி கூட்டங்களில் கூட்டணி கட்சியினர் குறித்து விமர்சித்து வருகின்றனர்.

இத்தகைய சூழ்நிலையில் தி.மு.க. அமைப்பாளர்கள் சென்னை சென்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்கள். அப்போது புதுவை அரசியல் நிலவரம் குறித்து முறையிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக 17-ந்தேதி நடக்கும் கூட்டத்தின்போது விவாதிக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

கவர்னருடன் சந்திப்பு

இந்தநிலையில் நேற்று பிற்பகல் கவர்னர் கிரண்பெடியை தி.மு.க. அமைப்பாளர்கள் சிவா எம்.எல்.ஏ. (தெற்கு), எஸ்.பி.சிவக்குமார் (வடக்கு), காரைக்கால் மாவட்ட அமைப்பாளர் நாஜிம் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். அப்போது கவர்னர் கிரண்பெடியிடம் மனு ஒன்றையும் கொடுத்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

புதுச்சேரியில் அரசுநிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளமும், அங்கு பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு பென்ஷனும் கிடைக்க உத்தரவிட வேண்டும். அதேபோல் தடையின்றி சம்பளம் வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தற்போது நீட் தேர்வு கொண்டுவரப்பட்டு விட்டதால் அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பில் படிக்க வாய்ப்பளிக்கும் வகையில் இடஒதுக்கீட்டில் 10 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற அமைச்சரவை முடிவுக்கு கவர்னர் ஒப்புதல் தரவேண்டும்.

மின்கட்டண குளறுபடி

ரோடியர், பாரதி, சுதேசி மில்லில் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை உள்ளிட்ட ஓய்வூதியக்கால பணத்தை உடனடியாக வழங்குவதுடன் அந்த நிறுவனங்களை புனரமைத்து திறந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும். பல்வேறு அரசு சார்பு நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு பல மாதங்களாக உள்ள நிலுவைத் தொகையை கிடைக்க செய்ய வேண்டும்.

ஊரடங்கு காலத்துக்கான மின் கட்டணங்கள் தவறுதலான கணக்கீட்டாலேயே பல மடங்கு உயர்த்தி வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில் கவர்னர் தலையிட்டு உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை ரத்துசெய்ய வேண்டும். மேலும் தவறுதலாகவும், அதிகமாகவும் நுகர்வோரிடம் கட்டணம் வசூலிக்காமல் மாதந்தோறும் குறிப்பிட்ட ஒரே நாளில் மின் பயன்பாடு குறித்து சரியான கட்டணத்தை நிர்ணயித்து வசூலிக்கவும் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்.

கூட்டுறவு சர்க்கரை ஆலை

குப்பை வரி, பாதாள சாக்கடை இணைப்பு கட்டணத்தை ரத்து செய்யவேண்டும். தொகுதி மேம்பாட்டு பணிகளுக்காக உள்ளாட்சித் துறையின் மூலம் எம்.எல்.ஏ.க்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியை ஒதுக்கித்தர வேண்டும்.

காரைக்கால்-பேரளம் ரெயில் திட்டத்தை உடனடியாக தொடங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவினை கைவிட்டு அந்த ஆலையை திறந்து இயக்கவேண்டும். விவசாயிகளுக்கு கரும்புக்கான நிலுவை பணத்தையும் தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கியையும் வழங்கவேண்டும்.

காவலர் தேர்வு

400 காவலர்களுக்கான உடல்தகுதி தேர்வை நிறுத்தி இருப்பதால் இளைஞர்கள் விரக்தி அடைந்துள்ளனர். எனவே உடனடியாக காவலர் தேர்வை நடத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரவேண்டும். பல்வேறு அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ரேஷன் கடைகளை உடனடியாக திறந்து மக்களுக்கு இலவச அரிசியை நேரடியாக வழங்க வேண்டும். ரேஷன்கடை ஊழியர்களுக்கு நிலுவை சம்பளத்தை வழங்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்