சாலைவரியை ரத்துசெய்யக்கோரி சுற்றுலா வாகன உரிமையாளர்கள் போராட்டம் 60 பேர் கைது
சாலை வரியை ரத்துசெய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட சுற்றுலா வாகன உரிமையாளர்கள் 60 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி,
சாலை வரியை ரத்து செய்யக்கோரி புதுவை சுற்றுலா வாகன உரிமையாளர்கள், டிரைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு 100 அடி ரோட்டில் உள்ள போக்குவரத்து துறை அலுவலகம் முன்பு வாகனங்களை நிறுத்தி போராட்டம் நடத்தினார்கள். அதன்பின் தற்போது ரோடியர் மில் திடலில் வாகனங்களை நிறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி தலைமை செயலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது சாலை வரியை ரத்துசெய்யக்கோரி கோஷங்களை எழுப்பினார்கள். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து சுற்றுலா வாகன உரிமையாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சாலைமறியல்
அதன்பின் புதுவை பஸ்நிலையம் அருகே வந்த அவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சஜித் மற்றும் போலீசார் சுற்றுலா வாகன உரிமையாளர்களை குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர்.
இதன்பின் 60 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான அனைவரும் கோரிமேடு போலீஸ் சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.