ஒரே கிராமத்தில் 2 விவசாயிகள் தூக்குப்போட்டு தற்கொலை மழையால் பயிர்கள் சேதம் அடைந்ததால் விபரீத முடிவு
ஹாவேரி அருகே ஒரே கிராமத்தில் 2 விவசாயிகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. மழையால் பயிர்கள் சேதம் அடைந்ததால் இந்த விபரீத முடிவை அவர்கள் எடுத்துள்ளனர்.
ஹாவேரி,
ஹாவேரி மாவட்டம் ராணி பென்னூர் தாலுகா கெலகேரி அருகே நிட்டூரு கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ் பரசல்லி (வயது 38). விவசாயியான இவருக்கு 1½ ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அங்கு அவர், வெங்காயம் மற்றும் மக்காச்சோளம் பயிரிட்டு இருந்தார். சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக வெங்காயம் மற்றும் மக்காச்சோளம் தண்ணீரில் மூழ்கி நாசமடைந்தது. இதனால் மகேசுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட்டது.
அதே நேரத்தில் விவசாயத்திற்காக வங்கிகளிலும், தனிநபர்களிடமும் மகேஷ் பல லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்தார். மழையால் பயிர்கள் நாசமடைந்ததால், அவரால் கடனை திருப்பி கொடுக்க முடியாமல் போனது. இதன் காரணமாக மனம் உடைந்து மகேஷ் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பயிர்கள் சேதம்
இதுபோல, அதே கிராமத்தில் வசித்து வந்தவர் கரியப்பண்ணவர் (44), விவசாயி. இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் வெங்காயம், மக்காச்சோளம் பயிரிட்டு இருந்தார். மழையால் அந்த பயிர்களும் சேதம் அடைந்ததால், கரியப்பண்ணவர் மிகுந்த மன வேதனை அடைந்தார். மேலும் விவசாயத்திற்காக வாங்கிய கடனையும், அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கொடுக்கும்படி கேட்டு கரியப்பண்ணவருக்கு தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
இதனால் தனது வீட்டில் கரியப்பண்ணவர் தூக்குப்போட்டு தனது உயிரை மாய்த்து கொண்டார். இந்த தற்கொலை சம்பவங்கள் குறித்து கெலகேரி போலீசார் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒரே கிராமத்தில் 2 விவசாயிகள் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.