மராட்டியத்தில் அடுத்த வாரம் முதல் தியேட்டர்கள் திறக்கப்படும் உரிமையாளர்கள் தகவல்
மராட்டியத்தில் அடுத்த வாரம் முதல் தியேட்டர்கள் திறக்கப்படும் என உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.
மும்பை,
கொரோனா பிரச்சினை காரணமாக கடந்த மாா்ச் மாதம் முதல் மராட்டியத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது. இதில் நேற்று முதல் தியேட்டர்களை திறக்க மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் புதிய படங்கள் எதுவும் வெளிவராதது உள்ளிட்ட காரணங்களால் நேற்று தியேட்டர்கள் எதுவும் திறக்கப்படவில்லை.
அடுத்த வாரம் திறப்பு
தியேட்டர்கள் திறக்கப்படாதது குறித்து தியேட்டர் உரிமையாளர் அகஷயி ரதி கூறுகையில், “நேற்று தான் அனுமதி கிடைத்து உள்ளது. திட்டமிடுவது, ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பது, கிருமி நாசினி தெளித்தல், புதுப்படங்கள் பெறுவது போன்றவற்றுக்கு ஒருவாரம் ஆகும். அதற்கான வேலையை தொடங்கிவிட்டோம். அடுத்த வாரம் தியேட்டர்களை திறக்க திட்டமிட்டுள்ளோம்” என்றார். சினிபோல்ஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி தேவங் சம்பத், வரும் ஞாயிறு முதல் படிப்படியாக தியேட்டர்களை திறக்க உள்ளோம் என்றார்.
புதுப்படங்கள் வெளியாகாத பட்சத்தில் அடுத்த வாரத்தில் பழைய வெற்றி படங்களை திரையிடவும் தயாராக இருப்பதாக தியேட்டர் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.