மும்பையில் சினிமா பிரபலங்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்தவர் கைது
மும்பையில் சினிமா பிரபலங்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை,
மும்பை அந்தேரி, ஆசாத்நகர் பகுதியில் ஒருவர் போதைப்பொருளுடன் வர உள்ளதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற அவர்கள் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
இதையடுத்து நடந்த சோதனையில் அவரிடம் இருந்து ரூ.1¾ லட்சம் மதிப்பிலான கஞ்சா, எம்.டி., சரஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரது காரையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சினிமா துறையினருக்கு சப்ளை
இதையடுத்து நடந்த விசாரணையில் பிடிப்பட்டவர் பெயர் அப்துல் வாகித் (வயது30) என்பது தெரியவந்தது. மேலும் அவர் சினிமா பிரபலங்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்து வந்தது தெரியவந்தது.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “அப்துல் வாகித் சினிமா துறையினர் மற்றும் டி.வி. தொடர் சம்மந்தப்பட்டவர்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்து வந்துள்ளதால் அவரது கைது முக்கியமானதாகும்” என்றார்.
நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை அடுத்து போதைப்பொருள் கும்பலுக்கும், இந்தி திரையுலகிற்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இந்த விவகாரத்தில் நடிகை ரியா சக்கரவர்த்தி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ரியா சக்கரவர்த்தி ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.