ராக்கெட் ஏவுதளம் அமைக்க எதிர்ப்பு: மணப்பாடு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் - கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தல்
குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, மணப்பாடு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உடன்குடி,
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக குலசேகரன்பட்டினம் அருகே அமராபுரம், கூடல்நகர், மாதவன்குறிச்சி, படுக்கப்பத்து உள்ளிட்ட பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோன்று உடன்குடியில் அனல்மின் நிலையமும், கல்லாமொழியில் நிலக்கரி இறங்குதளமும் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து மத்திய அரசின் கடற்படைக்கு சொந்தமான ‘ஜமுனா’ கப்பல் மணப்பாடு கடல் பகுதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. அதில் இருந்து ஹெலிகாப்டர் மூலமும், சிறிய படகு மூலமும் கடற்படையினர், அதிகாரிகள் சுற்று வட்டார பகுதிகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, ராக்கெட் ஏவுதளம், அனல்மின் நிலையம், நிலக்கரி இறங்குதளம் அமைக்கும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மணப்பாட்டில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 8 கடலோர கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 2-ந்தேதி கூட்டம் நடத்தி, ஆலோசனை மேற்கொண்டனர்.
தொடர்ந்து ராக்கெட் ஏவுதளம், அனல்மின் நிலையம், நிலக்கரி இறங்குதளம் அமைக்கும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மணப்பாட்டில் மீனவர்கள் கடந்த 4 நாட்களாக கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி பெரியதாழை மீனவர்களும் நேற்று கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மணப்பாடு மீனவர்கள் கூறியதாவது:-
குலசேகரன்பட்டினம் பகுதியில் ராக்கெட் ஏவுதளம், அனல்மின் நிலையம், நிலக்கரி இறங்குதளம் அமைக்கும் பணிகளுக்காக இந்திய கடற்படையினர் அவ்வப்போது ரோந்து கப்பல்கள், படகுகளில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் மீனவர்களின் வலைகள் சேதமடைகின்றன. கல்லாமொழி கடலில் நிலக்கரி இறங்குதளம் அமைக்கும் பணிகளுக்காக, கடலுக்கு அடியில் உள்ள பாறைகளை வெடி வைத்து தகர்ப்பதால், மீன்கள் இடம் பெயர்ந்து விடுகின்றன.
இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறோம். எனவே ராக்கெட் ஏவுதளம், அனல்மின் நிலையம், நிலக்கரி இறங்குதளம் அமைக்கும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளோம். மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு மாவட்ட கலெக்டர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். எங்களின் அச்சத்தையும், சந்தேகங்களையும் அரசு நிவர்த்தி செய்ய வேண்டும். அதுவரையிலும் கடலில் மீன்பிடிக்க செல்ல மாட்டோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.