சிங்கம்புணரியில் புரவி எடுப்பு விழாவின் போது மழை கொட்டி தீர்த்தது - வருண பகவான் கருணை காட்டியதாக விவசாயிகள் மகிழ்ச்சி

சிங்கம்புணரியில் புரவி எடுப்பு விழாவின் போது மழை கொட்டி தீர்த்தது. வருண பகவான் கருணை காட்டியதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2020-11-05 15:41 GMT
சிங்கம்புணரி,

சிங்கம்புணரியில் கூவாண கண்மாய் கரையோரம் கூவாண அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மழை வேண்டி ஐப்பசி மாத புரவி எடுப்பு விழா நடத்தப்பட்டது. இதற்காக கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக புரவி செய்ய சிங்கம்புணரி குலால வம்சா வழியினரிடம் பிடி மண் கொடுக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து குலாலர் வம்சத்தை சேர்ந்தவர்கள் புரவி செய்யும் பணியை மேற்கொண்டனர். அரண்மனை புரவி 2 மற்றும் ஆயக்கட்டு காரர்கள் நேர்த்தி கடன் புரவி 4 என 6 புரவிகள் செய்யப்பட்டு சிங்கம்புணரி பொட்டலில் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

அதனைத்தொடர்ந்து சிங்கம்புணரி மேல தெருவைச்சேர்ந்த கூவாண அய்யனார் வயல் ஆயக்கட்டுகாரர்கள் சார்பில் பொட்டலில் வைக்கப்பட்டிருந்த புரவி முன்பு சாமி அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பிறகு ஆட்டம் பாட்டத்துடன் புரவிகள் அங்கிருந்து புறப்பட்டன.

அரண்மனை புரவி 2 மற்றும் ஆயக்காட்டுக்காரர்கள் புரவிகள் 4 என 6 புரவிகள் சிங்கம்புணரி குலாலர் தெருவில் இருந்து புறப்பட்டு மேல தெரு வழியாக சந்திவீரன் கூடத்திற்கு சென்றது. பின்னர் சுக்காம்பட்டி சாலை வழியாக கூவாண வயல் அருகே அமைந்துள்ள கூவாண அய்யனார் கோவிலை சென்று அடைந்தது. அங்கு புரவி இறக்கி வைக்கப்பட்டு வேண்டுதல் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக நேற்று முக்கிய அம்சமாக புரவி எடுப்பு விழா தொடங்கியதும் வருண பகவான் கருணை காட்ட தொடங்கினார். லேசான சாரல்களுடன் பெய்ய தொடங்கிய மழை நேரம் செல்ல, செல்ல கொட்ட தொடங்கியது. புரவி தூக்க ஆரம்பித்ததில் இருந்து தொடங்கிய மழை சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் இருந்த கூவாண அய்யனார் கோவிலுக்கு சென்று சேர வரைக்கும் கொட்டியது. புரவி தூக்கி வந்தவர்கள் மழையில் நனைந்தபடியே பக்தி பரவசத்துடன் வந்தனர்.

பல ஆண்டுகளுக்குப்பிறகு புரவி எடுப்பு விழாவின் போது மழை பெய்ததை வருண பகவான் கருணை காட்டியதாக அப்பகுதி விவசாயிகள் நினைத்து மகிழ்ந்தனர். இந்த ஆண்டு புரவி எடுத்த போது மழை பெய்ததால் பருவமழை பெய்து விவசாயம் செழிக்கும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். விழா ஏற்பாடுகளை சிங்கம்புணரி மேலத்தெரு கூவாண அய்யனார் வயல் ஆயக்காட்டுக்காரர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்