நத்தம் அருகே பயங்கரம்: கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை

நத்தம் அருகே கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை செய்யப்பட்டார்.

Update: 2020-11-05 11:45 GMT
நத்தம்,

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள ரெட்டியபட்டியை சேர்ந்தவர் சின்னத்தம்பி. அவருடைய மகன் ஸ்ரீகாந்த் (வயது 18). இவர், சென்னையில் உள்ள ஒரு கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர், தனது சொந்த ஊரான ரெட்டியபட்டிக்கு வந்தார்.

இந்நிலையில் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள தனது வீட்டருகே ஒத்தையடி பாதையில் நேற்று இரவு ஸ்ரீகாந்த் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பதுங்கி இருந்த மர்ம நபர்கள், ஸ்ரீகாந்தை சுற்றி வளைத்து பிடித்தனர்.

பின்னர் அவர்கள் தாங்கள் வைத்திருந்த கத்தியால் ஆட்டை அறுப்பதை போல, அவரது கழுத்தை அறுத்தனர். தலைப்பகுதியிலும் சரமாரியாக கத்தியால் வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே, ரத்த வெள்ளத்தில் ஸ்ரீகாந்த் பரிதாபமாக இறந்தார். பின்னர் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் ஸ்ரீகாந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஸ்ரீகாந்த் குடும்பத்தினருடன் வேறு யாருக்காவது முன்விரோதம் உள்ளதா? அல்லது கொடுக்கல் -வாங்கல் தகராறு காரணமாக ஸ்ரீகாந்த் தீர்த்து கட்டப்பட்டரா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங் களில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த கொலை சம்பவம் நத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்