பெண் யானையை சுட்டுக்கொன்ற விவசாயி கைது நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்
தேன்கனிக்கோட்டை அருகே 12 வயது பெண் யானையை சுட்டுக்கொன்ற விவசாயியை வனத்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி வனப்பகுதி உள்ளது. நேற்று முன்தினம் சென்னமாளம் என்ற இடத்தில் யானைகள் ஊருக்குள் வராமல் இருப்பதற்காக வனத்துறை பகுதி-கிராமம் இடையே வெட்டப்பட்டுள்ள யானை தாண்டா அகழியில் 12 வயது பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது.
இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஜவளகிரி வனச்சரகர் நாகராஜ் தலைமையிலான வன ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான குழுவினர் யானையின் உடலை அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர்.
இதில் யானையின் பின்புற தலையில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருந்ததும், யானை துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து யானையின் உடல் அந்த பகுதியில் புதைக்கப்பட்டது.
விவசாயி கைது
இதுதொடர்பாக வன உயிரின குற்ற சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, தலைமையிட உதவி வனப்பாதுகாவலர் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில் சென்னமாலம் கிராமத்தை சேர்ந்த விவசாயி முத்துமல்லேஷ் (வயது 40) என்பவர் யானையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர், முத்துமல்லேசை நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
வனத்துறையினர் நடத்திய விசாரணையில், விவசாய நிலத்திற்குள் யானைகள் கூட்டம் வருவதை கண்ட முத்துமல்லேஷ் அவற்றை விரட்ட துப்பாக்கியால் சுட்டபோது பெண் யானை இறந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.