சீராக குடிநீர் வினியோகிக்க கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

சீராக குடிநீர் வினியோகிக்க கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-11-05 03:53 GMT
ஈரோடு, 

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட ஓடைப்பள்ளம் பகுதியில் சுமார் 700 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியை சேர்ந்த பெண்கள், கடந்த 10 நாட்களாக தங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்கவில்லை என்று கூறி காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஈரோடு டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அப்போது சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள், ‘தங்கள் பகுதிக்கு வரும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கடந்த 10 நாட்களாக எங்கள் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து நாங்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சீராக குடிநீர் வினியோகம்

தண்ணீர் வராததால் எங்களுடைய அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் நாங்கள் கடந்த 10 நாட்களாக மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே எங்கள் பகுதிக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

அதற்கு போலீசார், ‘இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி, குடிநீர் குழாயில் ஏற்பட்டு உள்ள உடைப்பு சரி செய்யப்பட்டு உங்கள் பகுதிக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர். அதை ஏற்றுக்கொண்ட பெண்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்