கறம்பக்குடியில் உள்ள முருகன் கோவிலை இடிக்க நெடுஞ்சாலைத்துறை ‘கெடு’

கறம்பக்குடி முருகன் கோவிலை வருகிற 19-ந் தேதிக்குள் இடித்து அகற்ற நெடுஞ்சாலைத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Update: 2020-11-04 23:50 GMT
கறம்பக்குடி, 

கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவன்-விநாயகர், தட்சிணாமூர்த்தி, நவக்கிரகங்கள் உள்ளிட்ட சுவாமிகளின் சன்னதிகளும் உள்ளன. பிரதோஷம், சங்கடகர சதுர்த்தி, தேய்பிறை அஷ்டமி, சஷ்டி, கார்த்திகை உள்ளிட்ட நாட்களில் இங்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். முகூர்த்த நாட்களில் தினமும் 5-க்கும் மேற்பட்ட திருமணங்கள் இக்கோவிலில் நடைபெறும்.

தைப்பூசம், பங்குனி உத்திரம், ஆடி வெள்ளி உள்ளிட்ட விசேஷ தினங்களில் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு சாமி தரிசனம் செய்வர்.

நெடுஞ்சாலைத்துறை இடம்

சிறப்புமிக்க இக்கோவில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருப்பதாக சிலர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து கடந்த 10 மாதங்களுக்கு முன்பு கோவிலை அகற்ற நெடுஞ்சாலைத்துறை சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கோவிலை அகற்றும் முயற்சி ஒத்தி வைக்கப்பட்டது.

பின்னர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை சார்பில் மீண்டும் நோட்டீஸ் அளிக்கப்பட்டு, கோவிலை அகற்ற பொக்லைன் உள்ளிட்ட எந்திரங்களுடன் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் கோவிலுக்கு வந்தனர். இதை எதிர்த்து இந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் சார்பில் தர்ணா போராட்டம் நடத்தப்பட்டதால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

கெடு

இந்தநிலையில், புதுக்கோட்டை நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் முருகன் கோவில் நிர்வாகத்திற்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், வருகிற 19-ந் தேதிக்குள் முருகன் கோவில் ஆக்கிரமிப்பை முழுவதுமாக அகற்றி கொள்ள வேண்டும், இல்லையேல் நெடுஞ்சாலைத்துறை சார்பில் இடித்து அகற்றப்பட்டு அதற்கான செலவுத் தொகையை கோவில் நிர்வாகத்திடம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பக்தர்கள் வழிபட்டு வந்த முருகன் கோவில் அகற்றப்பட உள்ளதை அறிந்து அவர்கள் வேதனை அடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்