கீழப்பழுவூரில், நிலம் ஒப்படைத்தவர்கள் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி நடந்த இடத்தை முற்றுகை

கீழப்பழுவூரில், நிலம் ஒப்படைத்தவர்கள் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி நடந்த இடத்தை முற்றுகையிட்டு, வேலையை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-11-04 23:04 GMT
கீழப்பழுவூர்,

திருச்சியில் இருந்து சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி கடந்த 3 ஆண்டு காலமாக நடந்து வருகிறது. இந்த நெடுஞ்சாலை அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பழுவூர் கிராம பகுதிகளின் வழியே செல்கின்றது. அதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கீழப்பழுவூர் கிராம மக்களிடம் சாலையின் இருபுறங்களிலும் உள்ள நிலங்களை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு சதுர மீட்டருக்கு குறிப்பிட்ட தொகையை நிர்ணயம் செய்து அனைவரிடமும் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில் நிலத்தை ஒப்படைத்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு, அடுத்த சில மாதங்களில் அதற்கான தொகையும் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ே-ாருக்கு சான்றிதழ் குறைபாடு காரணமாக பணம் வழங்குதல் தாமதப் படுத்தப்பட்டு வந்தது. பின் சில மாதங்களுக்கு பிறகு மீதமுள்ளவர்கள் சான்றிதழ்களை ஒப்படைத்ததையடுத்து அவர்களுக்கும் பணம் வழங்கப்பட்டுள்ளது.

அதிக பணம்

ஆனால் முன்பு நிலத்தை ஒப்படைத்தவர்களிடம் கொடுத்த பணத்தைவிட கடைசியாக நிலத்தை ஒப்படைத்தவர்களுக்கு ஒரு சதுர மீட்டருக்கு அதிகப்படியான பணம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த, முன்பு நிலத்தை ஒப்படைத்தவர்கள், தங்களுக்கும் அதே தொகையை வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக முறையிட்டு வருகின்றனர்.

மேலும் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கீழப்பழுவூரில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று கொண்டிருந்த மூன்று இடங்களையும் முற்றுகையிட்டு, தங்களுக்கும் அதே தொகையை வழங்க வேண்டும், இல்லை என்றால் பணியை செய்யவிடமாட்டோம் என்று போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நில உரிமையாளர்களிடம் சில மாதங்களில் தருவதாக கூறி, இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

முற்றுகை

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் நேற்று கீழப்பழுவூரில் தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று கொண்டிருந்த இடத்தை முற்றுகையிட்டு, அங்கிருந்தவர்களை வேலை செய்ய விடாமல் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் சந்திரசேகரன் மற்றும் கீழப்பழுவூர் இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் நில உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாலை நடத்தப்படும், அனைவரும் அங்கு வந்து விடுங்கள், பேசி தீர்த்துக்கொள்ளலாம், என தாசில்தார் கூறியதையடுத்து அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்