விழுப்புரம் தங்கும் விடுதியில் செல்போன் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை - காரணம் என்ன? போலீசார் விசாரணை

விழுப்புரத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் செல்போன் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-11-04 12:56 GMT
விழுப்புரம்,

மதுரையை சேர்ந்தவர் நாராயணன் (வயது 38). இவர் செல்போன் நிறுவனம் ஒன்றில் சிம்கார்டு விற்பனையாளராக மதுரை கிளையில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த மாதம் 28-ந் தேதியன்று மதியம் விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வெளியே சென்ற நாராயணன், இரவு 9 மணியளவில் தான் தங்கியிருந்த விடுதி அறைக்கு வந்தார். நேற்று காலை விடுதி ஊழியர் ஒருவர், நாராயணன் தங்கியிருந்த அறைக்கு சென்று கதவை தட்டினார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர், அந்த அறையில் இருந்து வெளியே வரவில்லை. பின்னர் கதவு தாழ்பாளை நெம்பி திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு நாராயணன், கயிற்றால் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த விடுதி ஊழியர்கள் இதுபற்றி விழுப்புரம் மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் தங்கியிருந்த அறையில் ஒரு கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில், எனக்கு உயிர் வாழ பிடிக்கவில்லை, என்னுடைய சாவுக்கு நானே காரணம், வேறு யாரும் காரணமில்லை, என்னை மன்னித்து விடுங்கள் என எழுதியிருந்தார்.

இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார், தொடர்ந்து நாராயணனின் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்