காணை, முகையூர் ஒன்றியங்களில் குடிநீர் குழாய் பொருத்தும் பணி - கலெக்டர் ஆய்வு

காணை, முகையூர் ஒன்றியங்களில் குடிநீர் குழாய் பொருத்தும் பணிகளை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2020-11-04 12:50 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சி ஒன்றியம் சூரப்பட்டு, அரும்புலி, கோழிப்பட்டு ஆகிய ஊராட்சிகளில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டப்பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து முகையூர் ஊராட்சி ஒன்றியம் அடுக்கம் ஊராட்சியில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புவழங்கும் திட்டப்பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்து அப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், இந்த திட்டத்தில் பயன்படுத்தப்படும் குடிநீர் குழாய்களின் தரம் சரியாக உள்ளதா? என்பதனை உறுதி செய்து பொருத்தப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும் அனைத்து ஊராட்சிகளுக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்து தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். சாலைகளில் மழைநீர் தேங்காத வண்ணம் அனைத்து கிராமங்களிலும் சாலை மேம்பாட்டு பணிகள் சிறப்பாக இருக்க வேண்டும். அதேபோல் அனைத்து கிராம பகுதிகளிலும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என கலெக்டர் அண்ணாதுரை அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் முத்தமிழ்ச்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காணை மணிவாசகம், கிறிஸ்துஜோசப்ராஜ், முகையூர் சாம்ராஜ், சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்