ஓசூரில், கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ஓசூரில் அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பணிமனையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓசூர்,
ஓசூர் போக்குவரத்து பணிமனையில் இருந்து சுற்றியுள்ள பகுதிகளுக்கும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம், காஞ்சீபுரம், சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்கும் தினம் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்கு 300-க்கும் மேற்பட்ட டிரைவர்கள், கண்டக்டர்கள், மெக்கானிக்குகள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த போக்குவரத்து தொழிலாளர்களுக்கு, நடப்பாண்டில் தீபாவளி போனஸ் தொகை, கடந்த ஆண்டை காட்டிலும் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. அதேபோல், தீபாவளிக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ரூ.10 முன் பணமும், இந்த ஆண்டு வழங்கப்படவில்லை. மேலும் தொழிலாளர்களுக்கு மாத சம்பளம் கணிசமான அளவில் குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உள்ளிருப்பு போராட்டம்
இந்தநிலையில் அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் நேற்று தீபாவளி போனஸ் பணத்தை முழுமையாக வழங்க வேண்டும். தீபாவளிக்கு தொழிலாளர்களுக்கு முன்பணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓசூர் போக்குவரத்து கழக பணிமனையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த போக்குவரத்துத்துறை அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து அரசின் கவனத்து கொண்டு செல்லப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. போக்குவரத்து தொழிலாளர்களின் உள்ளிருப்பு போராட்டத்தால், பணிமனையில் இருந்து மற்ற பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.