குடியிருப்பவர்களுக்கு 30 நாட்களுக்குள் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை கலெக்டர், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

அரசு புறம்போக்கு நிலங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்பவர்களுக்கு 30 நாட்களுக்குள் வீட்டுமனை பட்டா வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகா அறிவுறுத்தினார்.

Update: 2020-11-04 05:37 GMT
தர்மபுரி, 

தர்மபுரி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் வருவாய்த்துறை மற்றும் கூட்டுறவுத்துறை திட்டங்கள் மற்றும் பயனாளிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு கலெக்டர் கார்த்திகா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான், உதவி கலெக்டர்கள் பிரதாப், தணிகாசலம், சிப்காட் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், நெடுஞ்சாலைகள் மாவட்ட வருவாய் அலுவலர் முகுந்தன், கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் கவிதா, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் இளவரசி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகா பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் வீடுகள் கட்டி 3 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் தர்மபுரி மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு 30 நாட்களுக்குள் பட்டா வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிப்காட் தொழிற்பேட்டை

மயானம், நீர்நிலைகளை சுற்றியுள்ள பகுதிகள், நெடுஞ்சாலை பகுதிகளில் வீடுகள் கட்டி குடியிருப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க இயலாது. அவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டி வழங்க இடம் தேர்வு செய்யப்பட்டு வீடுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தர்மபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க தற்போது சுமார் 1,000 ஏக்கர் அளவில் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள நிலங்களை கையகப்படுத்த சிப்காட் மாவட்ட வருவாய் அலுவலர் துரிதமாக பணியாற்றிட வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

மேலும் செய்திகள்