கோபி அருகே இடி- மின்னலுடன் பலத்த மழை; 20 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
கோபி அருகே இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் 20 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
ஈரோடு,
கோபி பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் அடித்து வந்தது. இந்த நிலையில் கோபி, மொடச்சூர், நஞ்சகவுண்டம்பாளையம், கரட்டூர், பா.வெள்ளாளபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை 4 மணிக்கு இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை காலை 6.30 மணி வரை நீடித்தது. சுமார் 2½ மணி நேரம் கொட்டி தீர்த்த மழையால் ரோடுகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை தேங்கி நின்றது.
கோபியில் உள்ள கீரிப்பள்ளம் ஓடையிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
வெள்ளம் சூழ்ந்தது
கோபி அருகே உள்ள பா.நஞ்சகவுண்டம்பாளையத்தில் பெய்த பலத்த மழையால் அந்த பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் அங்குள்ள வீதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேவர முடியாமலும், வீதிகளில் நடமாட முடியாமலும் அவதிப்பட்டனர். மழை நின்று வெள்ளம் வடிந்த பின்னர் தான் வீதிகளில் மக்கள் நடமாட முடிந்தது. கோபியில் நேற்று 74 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
புஞ்சைபுளியம்பட்டி
இதேபோல் புஞ்சைபுளியம்பட்டி, பனையம்பள்ளி, காவிலிபாளையம், எரங்காட்டுப்பாளையம், காராப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை மழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.