ஈரோட்டில் பரபரப்பு மு.க.ஸ்டாலினை விமர்சித்து சுவரொட்டிகள் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ஈரோட்டில் மு.க.ஸ்டாலினை விமர்சித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சித்தும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பாராட்டியும் ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் நேற்று முன்தினம் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. இதுபற்றிய தகவல் பரவியதும் தி.மு.க.வினர் அந்த பகுதியில் குவிந்தனர். அவர்கள் அந்த சுவரொட்டிகளை கிழித்து அப்புறப்படுத்தினார்கள். மேலும், போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மு.க. தெற்கு மாவட்டம் சார்பில் அன்னை சத்யாநகர் பகுதியில் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் வி.சி.சந்திரகுமார், கந்தசாமி, சச்சிதானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.வினரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அதிருப்தி
இதுகுறித்து மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறுகையில், “தி.மு.க. சார்பில் சட்டமன்ற தேர்தலுக்கான முதல் பிரசார பொதுக்கூட்டம் ஈரோட்டில் கடந்த 1-ந் தேதி நடந்தது.
இந்த கூட்டத்தில் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். இதனால் அதிருப்தி அடைந்த அ.தி.மு.க.வினர் ஈரோட்டில் அவதூறு சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர். இதுதொடர்பாக போலீசாரிடம் புகார் கொடுத்து உள்ளாம். இதே நிலை மீண்டும் நடந்தால் ஈரோட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது” என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் செந்தில்குமார், செல்லப்பொன்னி, பி.கே.பழனிசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.