திருத்துறைப்பூண்டி அருகே வேன் மோதியதில் ஊரக வேலை திட்ட பணியில் ஈடுபட்ட 2 பெண்கள் பலி

திருத்துறைப்பூண்டி அருகே ஊரக வேலை திட்ட பணியில் ஈடுபட்டு இருந்த 2 பெண்கள் மீது வேன் மோதியதில் பலியானார்கள். மேலும் வேனை ஓட்டிய என்ஜினீயரிங் மாணவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2020-11-04 02:38 GMT
திருத்துறைப்பூண்டி, 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ளது மேலமருதூர். இந்த ஊரில் ஊரக வேலை திட்ட பணியில் நேற்று 58 பெண்களும், 15 ஆண்களும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். மேலமருதூர் தியாகி வாய்க்கால் பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணி நேற்று நடந்தது. அதே பகுதியில் திருத்துறைப்பூண்டியில் இருந்து வேதாரண்யம் அகஸ்தியம்பள்ளி செல்லும் அகல ரெயில் பாதை பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது. அதற்காக அந்த வாய்க்கால் மற்றும் சாலையை கடக்க மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

ஊரக வேலை திட்ட பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் பலர் மதிய நேரத்தில் சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் ஓய்வு எடுக்க மேம்பால பணிகள் நடைபெறும் பாலத்தின் கீழ் அமர்ந்து இருந்தனர் அப்போது மேம்பாலம் கட்டுமான பணிக்காக கம்பி, சிமெண்ட் போன்ற பொருட்களை ஒரு சரக்கு வேனில் மணக்காட்டை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கார்த்தி என்பவர் ஓட்டி வந்தார்.

வேன் மோதி 2 பெண்கள் பலி

அவர் சாப்பிடுவதற்காக அங்கு வேனை நிறுத்தி விட்டு நிழலில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். அப்போது கட்டுமான பணியில் உதவியாளராக வேலை பார்த்து வந்த மணக்காட்டை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் தங்க பூபதி(22) என்பவர், திடீரென நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சரக்கு வேனை ஓட்டுவதற்கு முயற்சி செய்துள்ளார்.

அப்போது அவரது கட்டுப்பாட்டை மீறி வேன் அங்கு ஓய்வெடுத்துக்கொண்டு இருந்த வேதரத்தினம் மனைவி விஜயலட்சுமி(வயது 63), தேவராஜ் மனைவி கமலா(60) ஆகியோர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த இரு பெண்களும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

வேனை ஓட்டியவரும் பலி

மேலும் பெண்கள் இருவர் மீதும் மோதிய வேன் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த தியாகி வாய்க்காலில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் வேனின் உட்புறத்தில் தண்ணீரில் மாட்டிக்கொண்ட தங்க பூபதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், தங்க பூபதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

திருத்துறைப்பூண்டி பகுதியில் விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

மேலும் செய்திகள்